டிசம்பர் 6-ம் தேதி முதல் ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும், அங்கு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் நேற்று மாலை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மின்சார துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் அங்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
புயல் காரணமாக 3 ஆயிரத்து 750 மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. இதனை சரி செய்யும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஏராளமான மரங்களும் சாய்ந்து உள்ளன. கன்னியாகுமரியில் கடலுக்கு மீன்பிடிக்க 29 படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். இதில் 18 படகுகளில் சென்ற மீனவர்கள் திரும்பி வந்துள்ளனர். 11 படகுகளில் சென்ற 30 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்களை கடலோர காவல் படையின் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் பதவி ஏற்றதும் இந்த ஆட்சி ஒரு மாதம், 2 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். பின்னர் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் முடியவில்லை. பின்னர் மானியக் கோரிக்கையின் போது கலைத்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. மு.க.ஸ்டாலின் எண்ணங்களை பொய்யாக்கி நாங்கள் கடந்த 10 மாதங்களாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கு அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் இந்த மண்ணின் மைந்தன். ஆர்.கே.நகர் அ.தி.மு.க. கோட்டையாகும். இங்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாங்கள் ஆர்.கே. நகரில் வருகிற 6-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.
இன்று (2-ம் தேதி) காலையில் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது : ‘ஆர்.கே.நகரில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா அங்கு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்று அங்கு செய்த பணிகளை முன்வைத்து வெற்றி பெறுவோம். டிடிவி தினகரன் கட்சியிலேயே இல்லை. எனவே அவரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’. இவ்வாறு கூறினார்.