நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை கூறினார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
மேயர் தேர்தல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் சூழலை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
தற்போது வரை அதுபோல நிலைமை எதுவும் இல்லை. இவை எல்லாம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே அதிமுகவில் விருப்ப மனு கோரி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறீர்களே?
கால அவகாசம் குறைவு என்பதால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்ப மனு பெறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகள் வேறு உள்ளனர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சட்டமன்ற தொகுதியும் நாடாளுமன்ற தொகுதியும் குறைவு. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் என்பது அதிகமானோர் போட்டியிடுகிறார்கள். அதனால், அவர்களை பரிசீலித்து கட்சி முடிவெடுக்க வேண்டும் என்பததால் கால அவகாசம் குறைவு என்பதால் முன்கூட்டியே விருப்பமனு பெறுகிறோம்.
தேர்தல் அலுவலர்கள் பட்டியல் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டிருக்கிறதே?
தேர்தல் ஆணையத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு என்று தனி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுடைய முடிவுகளின்படி அறிவிக்கிறார்கள்.
அமமுகவில் இருந்து அதிமுகவில் இணையவதற்கு யாராவது பேசிக்கொண்டிருக்கிறார்களா?
பல பேர் பேசிக்கோண்டிருக்கிறார்கள். இன்றைய தினம்கூட இணைந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் இருந்து பல பேர் இணைந்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அமமுகவை நாங்கள் ஒரு கட்சியாகவே கருதவில்லை. தேர்தல் ஆணையத்தில் அவர்கள் கட்சியாகவே பதிவு செய்யப்படவில்லை. அதனால், அவர்களைப் பொருட்படுத்த தேவையில்லை.
கோவையில் அதிமுகவின் கொடிக்கம்பம் விழுந்து ஒரு பெண் காயம் அடைந்திருக்கிறாரே?
அது பற்றி தகவல் ஏதும் இன்னும் வரவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹெல்மெட் அணியாததால் காவல்துறை துரத்தியதால் ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின்படி காவல்துறை செயல்படுகிறது. பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், மக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் காவல்துறை தடுத்து நிறுத்தும்போது வாகனத்தை நிறுத்தி உரிய பதில் அளித்துவிட்டு செல்ல வேண்டும்.
கொடிக்கம்பம், பேனர், தெருக்களில் சாலைகளில் நடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறதே?
சாலைகளில் கொடி நடக்கூடாது என்று கூறவில்லை. அப்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.
நீதிமன்றம் நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிராக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறதே?
நீதிமன்றத்தில் இருக்கிற விவகாரத்தை விமர்சிக்க விரும்பவில்லை.
அதிமுக மக்களவை உறுப்பினர் அமெரிக்காவில் நான் மோடியின் நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாரே?
அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அப்படி சொல்வதில் தவறு ஒன்றுமில்லை. மோடிதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் இல்லையா? அதனால், அவர் கூறியதில் தவறு இல்லை.
நெடுஞ்சாலைத்துறை ரூ.5000 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியதே ஏன்?
சாலையை விரிவுபடுத்துவதற்காகவோ அல்லது மின் கோபுரம் அமைக்கவோ நிலம் கையகப்படுத்த முடியவில்லை. எங்குமே தமிழகத்தில் நிலம் எடுக்க முடியவில்லை. யாரும் ஒத்துழைப்பு அளிக்க முடியாவிட்டால் எப்படி செயல்படுத்துவது?
14 சாலைகள் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. 4 சாலைகள் விரிவாக்கம் செய்ய திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். நிலம் கையப்படுத்தும்போது போராட்டங்கள் தடைகள் வந்தால் எப்படி செயல்படுத்த முடியும்?
ரஜினி வெற்றிடம் பற்றி பதில் அளித்தார். அதே போல, நடிகர் கமல்ஹாசனும் அரசை விமர்சித்து வருவது பற்றி உங்கள் கருத்து?
கமல்ஹாசன் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லையே ஏன்? கமல்ஹாசன் மிகப்பெரிய தலைவர்தானே ஏன் இடைத்தேர்தலைல் போட்டியிடவில்லை. கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு ஓட்டு வாங்கினார்.
கமல்ஹாசனுக்கு 66 வயதாகிவிட்டது. திரைப்படத்தில் வாய்ப்பு இல்லாததால் ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தவறில்லை. ஆனால், மற்றவர்களைக் குறைசொல்லி பேசுவதுதான் தவறானது. இத்தனை ஆண்டுகாலம் அவர் எங்கே சென்றிருந்தார். நான் 45 ஆண்டுகாலம் கட்சியில் பணியாற்றி போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றிருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் பணியாற்றி மக்கள் ஆதரவுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.
ஆனால், அவர்கள் மக்களுக்கு என்ன பணி செய்திருக்கிறார்கள்? திரைப்படத்தில் நடித்து வருமானத்தை ஈட்டிவிட்டார்கள். இன்றுவரை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றுவரை வருமானத்தை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மக்களிடத்தி மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறமாதிரி காட்டிக்கொள்கிறார்கள். இதைவிட மிகப்பெரிய நடிகர் சிவாஜி கணேசன் தேர்தலை சந்தித்து என்ன நிலை ஏற்பட்டது என்று மக்களுக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் சிவாஜி கணேசன். அவர் கட்சி தொடங்கி ஏற்பட்ட நிலைமைதான் கமல்ஹாசனுக்கு ஏற்படும். கமல்ஹாசன் வயது முதிர்ந்த காரணத்தால் அவர் முன்னேற்பாடாக அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் படம் பார்த்தால்கூட போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? அவருக்கு எத்தனை ஊராட்சி, பேரூராட்சி இருக்கிறது என்று தெரியும்? அடிப்படையே தெரியாமல் தலைவர் மாதிரி உருவாக்கிவிட்டார்கள்.
படத்தில் நடித்து மக்களின் பணத்தை பெற்றுவிட்டார்கள். அந்த பணத்தின் வாயிலாக இன்று அரசியலில் பிரவேசிக்கிறார்கள்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் இதே நிலைதான் ஏற்படுமா?
யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல இயலாது. அவர் கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்கு உண்டான பதில் தரப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.