டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி:
அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை சென்றுள்ளார். இந்நிலையில் கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாள்ர்களை சந்தித்த அவரிடம் டிடிவி தினகரன், 18 எம் எல் ஏக்கள் வழக்கின் தீர்ப்பு, இடைத்தேர்தல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டனர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அவர் பேசியதாவது,
”தமிழகத்தில் ஆட்சியை கலைக்க கட்சியை உடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. தொண்டர்களின் ஆதரவால் இது சாத்தியமானது. நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும். தர்மம் வென்றுள்ளது.
என்றைக்கும் கட்சியை உடைக்க முடியாது ஆட்சியை கலைக்க முடியாது என்றளவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், “ டிடிவி என்ன மகானா? அவர் அதிமுக உறுப்பினரே இல்லை. மறைந்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்தில் அவர் 10 ஆண்டுகளாக காணாமல் போய் இருந்தார். பின்னர் அவர் குறித்து எப்படி கருத்து தெரிவிக்க முடியும். நிருபர்களாகிய உங்களுக்கு பரபரப்பு செய்தி தேவைப்பட்டால் அவர் குறித்து செய்தி போட்டுக் கொள்ளுங்கள்.” என்று பொங்கினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழினிசாமி, “20 தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தலை சந்திக்க அதிமுக தயார். முல்லைப்பெரியாறில் அணைக்கட்ட கேரள அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டது, இனி ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மீனவர்கள் தாக்கப்பட கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. புதிய அணை கட்ட தமிழக அரசு தயாராக உள்ளது, மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்த விரைவில், ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும்,தான் செல்லும் இடமெல்லாம் மக்கள் தங்களது ஆதரவை தருவதாகவும், அதிமுகவிற்கு மக்களிடையே என்றுமே பேராதரவு இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.