தமிழகத்தில் ஊரடங்கை மட்டுமே நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது என்றும், கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisment
சென்னையில் ரூ.136 கோடியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதைதொடர்ந்து மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தமுதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"கிண்டியில் கொரோனா சிகிச்சை மையத்தில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக்கூடம், வைஃபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. டாக்டர்களுடனும், உறவினர்களுடனும் நோயாளிகள் காணொலி மூலம் பேசும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழக அரசிடம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறைளயில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை. சென்னையில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டியுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். அரசின் நிதிநிலைக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம்" என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”