தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர் கார்த்திக் குடும்பத்தினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு அவர்கள் வசிப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பினையும் ஒதுக்கி அதற்கான ஆணையையும் அளித்தார். இது குறித்த விபரம் வருமாறு;
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாக்கி அணி வீரர் கார்த்திக் ஏழ்மை நிலையைத் தாண்டி கடும் பயிற்சியாலும், முயற்சியாலும் இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்தார்.இதற்கிடையே தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கார்த்திக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு சில மாதங்களுக்கு முன்பு முதுகுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவர் அறிவுரைப்படி நீண்ட தூர வெளியூர் பயணிகளைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையே இப்போது முதல்வர் ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
பெரம்பலூரில் எறையூரில் புதிய சிப்காட் தொழிற்பேட்டையை அவர் திறந்து வைத்தார்.இதற்கிடையே நேற்று மாலையில் அரியலூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
குறிப்பாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ்.கார்த்திக் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை அவர்களுக்கு வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் இந்திய ஹாக்கி அணிக்குக் கடந்த மே மாதம் தேர்வானார். கார்த்திக் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது தந்தை செல்வம் வங்கியில் இரவு நேரக் காவலாளியாக பணியாற்றியவர். இப்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றுகிறார்.
அவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். ஏழ்மையான நிலையிலும் கார்த்திக்கிற்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். பெங்களூரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வானார். இருப்பினும், பயிற்சி பெறுவதில் அவருக்கு போதிய பண வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இந்த செய்தி தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்போதே அந்த மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கார்த்திக்கின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தார்.
அப்போதே உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மேலும், ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் உறுதி அளிதிருந்தார்.இதற்கிடையே ஒரே வாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஹாக்கி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

மேலும், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையையும் முதல்வர் வழங்கினார்.முன்னதாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜா, தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்