கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று வேதனை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்குள் போதைப் பொருளை எந்த வழியிலும் அனுமதிக்க முடியாது. கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தின்போது 21 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றனர். மேலும் கடந்த ஆண்டு ஆந்திராவில் இருந்து மெத்தனால் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்; மு.க. ஸ்டாலின்
இதற்கிடையில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றார். இது குறித்து பேசிய மு.க. ஸ்டாலின், “பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க கூடுதல் நிவாரண நிதி அளிக்கப்படும்.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும். பெற்றோர் இருவரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யப்படும் என உறுதியளித்த மு.க. ஸ்டாலின், “பெற்றோர் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்” என்றார்.
ஓடி ஒளிபவன் அல்ல மு.க. ஸ்டாலின்
தொடர்ந்து, அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு பேசிய மு.க. ஸ்டாலின், “இந்தப் பிரச்னையை கண்டு ஒடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்போடு பதில் அளிப்பவன். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொறுப்போடு பதிலளித்துள்ளேன்” என்றார். மேலும், சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அ.தி.மு.க. மீது குற்றச்சாட்டு
தொடர்ந்து, அ.தி.மு.க மீது குற்றஞ்சாட்டிய மு.க. ஸ்டாலின், “சட்டப்பேரவை விதிகள் தெரிந்தும் அ.தி.மு.க திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. சட்டப்பேரவையில் பேச அனுமதி அளித்தும் அமளியில் ஈடுபட்டதை தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.
ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் நிகழ்வில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளியும் அடங்குவர். மேலும் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
கள்ளக்குறிச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“