சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சமூக நீதிக்கான அனைத்திந்திய சம்மேளனம் தொடங்கவிருப்பதாக தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, "புதிதாக தொடங்கவிருக்கும் கூட்டமைப்பு அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதி தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க உடனடி ஆலோசனைகளை வழங்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சதவீதம் வேறுபடலாம். இருப்பினும், சமூக நீதியின் சித்தாந்தம் ஒன்றுதான்
அனைவருக்கும் எல்லாமே இந்த கொள்கை அடிப்படையில் கூட்டமைப்பு செயல்படும். இது கூட்டாட்சி கொள்கைகளை அடைய பாடுபடும் கூட்டமைப்பாக இருக்கும். கருத்தரங்களில் பங்கேற்றவர்கள் அவ்வப்போது சந்தித்து, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
திராவிட இயக்கத்தின் முதன்மை நோக்கம் சமூக நீதி மற்றும் பெண்ணுரிமை தான். அவற்றை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை தொடங்க விருக்கிறோம்.
மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ததற்காக மாநாட்டில் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இது குறித்து பேசிய அவர், இந்த இடஒதுக்கீட்டை வழங்கியது பாஜக என்று சில பிரிவினர் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு உண்மை தெரியவில்லை.
திமுக உச்ச நீதிமன்றத்தில் 2020 மே மாதம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், பாஜக அரசு 2021 ஜூலையில்தான் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொண்டது. . இந்த உண்மையை அவர்களால் மறைக்க முடியாது என கூறி ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கு திமுக அரசின் பணிகளை விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமூகநீதியை அடையும் திமுகவின் பணி இந்த ஒரு வழக்கோடு முடியபோவதில்லை. சமூக நீதி என்பது சமூக சமத்துவம் ஆகும். அது கல்வியில் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். “எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார். அத்தகைய நீதியை உருவாக்கவே திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.
இந்த மாநாட்டை அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் குழு ஏற்பாடு செய்தது. இதில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, ஏஐபிஎப் அமைப்பின் தலைவர் ஈஸ்வரய்யா, மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஷகன் புஜ்பால், ஆந்திர மாநில அமைச்சர் ஆதிமுலப்பு சுரேஷ், பிகார் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., முகம்மது பஷீா், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பலரும் பேசினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.