/tamil-ie/media/media_files/uploads/2023/07/Trichy-3.jpg)
வேளாண் கண்காட்சி நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 27-ம் தேதி கேர் கல்லூரியில் வேளாண் சங்கமம் 2023 என்ற தலைப்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.
27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு மாநில அளவில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம். ஆர். கே பன்னீர்செல்வம், “வருகின்ற 27, 28, 29 ஆகிய நாட்களில் கேர் கல்லூரி மைதானத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு வேளாண் சங்கமும் விழாவை தொடக்கி வைக்க உள்ளார்.
வேளாண் சங்கமம் 2023 என்ற தலைப்பிலான வேளாண் கண்காட்சி கருத்தரங்கம் தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் நடைபெறுகிறது.
இதில் வேளாண்மை தொழில்துறை, வேளாண்மை மார்க்கெட்டிங், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளை சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குபெற்று புதிய முயற்சிகள், விவசாயத்திற்கு எளிமையாக லாபம் தரக்கூடிய நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு லாபத்தை தரக்கூடிய பயிற்சிகள் இங்கு வழங்கப்பட இருக்கிறது.
வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையின் சார்பாக பயிர் சம்பந்தமாக கருத்துகளை வழங்க இருக்கிறார்கள். இக்கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
பொறியியல் துறை சார்பில் விவசாய பெருமக்களுக்கு தேவையான இயந்திரங்கள் தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் எந்தெந்த பருவத்தில், எவ்வகை பயிரை பயிரிடவேண்டும் என்பது குறித்தும். பயிருக்கு சவாலாக இருக்கின்ற பூச்சிகளை அழிப்பது, மாற்று பயிர் பயிரிடுவது குறித்தும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வேளாண் விளைப் பொருட்களை எவ்வாறு மதிப்பு கூட்டி விற்பது? என்பது போன்ற பயிற்சியும் இக் கண்காட்சியில் வழங்கப்படும்.
தக்காளி விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், காலநிலை, உற்பத்திக்கு ஏற்ப தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.
மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தக்காளி விலை பரவாயில்லை. உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவு துறை மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.