3 நாள் நிகழ்ச்சிகள்: கோவையில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்திலிருந்து பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை வரை திமுக-வினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
Advertisment
முதல்வரை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் வரவேற்றனர்.
முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக விமான நிலையத்திலிருந்து பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை வரை திமுக-வினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து முதல்வர் இன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
இதையடுத்து தமிழக முதல்வர் நாளை காலை 10 மணிக்கு ஈச்சனாரி பகுதியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து அவர் அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
பின்னர், மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர், இரவே திருப்பூர் சென்று அடுத்த நாள் 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதியில் திருப்பூர் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் கோவை வந்து பி.எஸ்.ஜி தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை கிளம்புகிறார்.
கோவை மாவட்டம் முழுவதும் முதல்வர் வருகையையொட்டி இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"