விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான செட்டியார் குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்தனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில், மற்ற 20 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே போல, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க தவறிய, மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவிஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
இதைத் தொடர்து, கள்ளச் சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், விழுப்புரம் மதுவிலக்கு டி.எஸ்.பி பழனி, செங்கல்பட்டு டி.எஸ்.பி துரைபாண்டி இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"