சுதந்திர தினவிழா நாளில் மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சம்பிரதாய நிகழ்வான தேனீர் விருந்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மோதல்களும் உரசல்களும் தொடர்ந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது, தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி ஆளுநரை கடுமையாக விமர்சிப்பது. ஆளுநர் அவ்வப்போது திராவிடத்தை விமர்சிப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.
ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, மாலையில் ஆளுநர் மாளிகையில் தரப்படும் தேநீர் விருந்தை 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்தது.
குடியரசு தினம், சுதந்திர தின விழாவின்போது தமிழக கவர்னர் மாளிகையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை)= மாலையில் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு ஆளுநர் மாளிகை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டும், தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால், தி.மு.க ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்றனர். அ.தி.மு.க சார்பில் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பா.ஜ.க சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.