Advertisment

கருணாநிதி பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள்

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தென் சென்னையில் ரூ.500 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருவாரூரில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு, திருநங்கைகளுக்கு பயணச் சலுகை உள்ளிட்ட 6 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கருணாநிதி பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், தென் சென்னையில் ரூ.500 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருவாரூரில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு, திருநங்கைகளுக்கு பயணச் சலுகை உள்ளிட்ட 6முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 6 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர் - சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர் - ஒடுக்கப்பட்டமக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர் - பெரியாரின் சலியாத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அயராத தொண்டும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர் - உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து

வாழ்ந்தவர் - தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற

மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்.

1) தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து தம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து, எண்ணற்ற நலத் திட்டங்களை மருத்துவத் துறையில் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அவற்றில், கர்ப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக விளங்கக்கூடிய டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம், பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் என தமிழகத்தின் மருத்துவத் துறையில் முத்திரை பதித்த முக்கியத் திட்டங்கள் அனைத்தும், அவரின் சிந்தனையில் உதித்தவையே. இதுபோன்று ஏழை எளியோர் ஏற்றம் பெற, தம் வாழ்நாளில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி, தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.

2) சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்

புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதி நவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். மாணவர்கள், கல்வியாளர்கள்,

ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.

3) இலக்கிய மாமணி விருது துவக்கம்

இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி” என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

4) கனவு இல்லம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

5) திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள்

திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் கூடுதலாக கிடங்குகள் கட்டுமானம் செய்வது விவசாயிகளுக்கு பேருதவியாக அமையும். விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு

உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூறியவாறு 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

6) திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை

மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச

பயண சலுகை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும்." என்று தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Karunanidhi Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment