Advertisment

இந்தியில் வெளியான முதல்வரின் அறிக்கை... இந்தி திணிப்பு எதிர்ப்பு என்னாச்சு? நடிகை விமர்சனம்

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை தமிழக அரசு இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளதால் தமிழக அரசியலில் சர்ச்சையாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Hindi imposition, CM MK Stalin, Tamilnadu, இந்தியில் வெளியான முதல்வரின் அறிக்கை, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்னாச்சு, நடிகை விமர்சனம், CM MK Stalin announcement on Ambedkar, CM MK Stalin press release in Hindi language trigger controversy

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை தமிழக அரசு இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளதால் தமிழக அரசியலில் சர்ச்சையாகி உள்ளது.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மற்றும் விசிக எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, சென்னையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழுஅளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் முன்வைத்திருந்தார். மேலும், பெரியார் பிறந்தநாளை 'சமூகநீதி நாளாக' அறிவித்தது போல, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

விசிக தலைவர் திருமாவளவனின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், “அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்” என்று அறிவித்தார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், இன்று கொண்டாடப்படும் சமத்துவ நாள் விழாவையொட்டி திமுக மாவட்ட அலுவலகங்களில், அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 238 சமத்துவபுரங்களிலும் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலை முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்தை வைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி சமத்துவ நாளைக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விசிக உட்பட பல்வேறு கட்சிகள் நன்றி தெரிவித்தன. திருமாவளவன், எம்.எல்.ஏ.க்களுடன் சென்று முதல்வரை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் குறித்து பேசியதை தமிழக அரசு இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்த செய்திக் குறிப்பை வைத்து பாஜகவினர் பலரும் இது திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்று விமர்சனங்களை முன்வைத்து கேள்வி எழுப்பியதால் சர்ச்சையாகியுள்ளது.

நடிகை கஸ்தூரி, முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக அரசு இந்தி மொழியில் செய்திக் குறிப்பாக வெளியிட்டததை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இன்று முதலமைச்சர் அம்பேத்கர் குறித்து பேசியவை இந்தி மொழியில் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது” என்ற வரிகளுக்கு "இது வேற, அது வேற என்று சுட்டிக்காட்டி விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு இந்தி மொழியை மாநிலங்கள் மீது திணிப்பதை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அண்மையில், மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி இணைப்பு மொழியாகக் கொள்ள வேண்டும் என்று பேசியபோது, அதற்கு திமுக எதிர்வினையாற்றியது. ஆனால், தமிழக அரசே தற்போது இந்தியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளனர்.

அதற்கு, திமுக தரப்பில், “அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, இந்திக்காரங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் இந்தியில் தான் கொடுக்கனும் அவர்களிடம் தமிழை திணிக்க முடியாது.. கூடாது… இதான் திராவிட அரசியல் யார்மீதும் எதையும் திணிக்க கூடாது என்பதுதான் சரி” என்று கஸ்தூரி ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திமுக ஆதரவாளர்களின் இந்த விளக்கத்துக்கு, சிலர் அப்படியென்றால் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருக்கலாமே? அதுதானே இணைப்பு மொழி? என்று பதில் கேள்வி எழுப்புகின்றனர்.

சமீபகாலமாகவே, சில முக்கிய அறிவிப்புகள், தகவல்கள் இந்தியிலும் வெளியாகி வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை, இந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியானது.

ஸ்டாலினின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், இந்தியில் வெளியிடப்படும்போது, மு.க. ஸ்டாலின் பற்றி வடமாநிலங்களிலும் தெரியவரும் என்று திமுக தரப்பில் நம்பப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி டாக்டர் அம்பேத்கர் இந்தியா முழுமைக்குமான தலைவர், தமிழகத்தில் அவருடைய பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வட மாநில மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு முதல்வரின் அறிவிப்பை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதே வேளையில், திமுக அரசு இந்தி திணிப்பு எதிர்ப்பு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Stalin Hindi Kasturi Shankar Babasaheb Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment