/indian-express-tamil/media/media_files/2025/09/03/mk-stalin-europe-tour-2025-09-03-20-55-27.jpg)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். Photograph: (x/@mkstalin)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மு.க. ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்.
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன்.
விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் NRW எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ப் விமான நிலையத்தில் தரையிறங்கினேன்.
ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர்.
அதன்பிறகு அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட பல தமிழ்ப் புத்தகங்களின் முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் நூல்கள் - ஆவணங்களைக் கொண்ட அந்தத் தமிழ்த்துறை மற்றும் நூலகத்தைக் காப்பாற்றும் வகையில் அதன் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு 2021-ல் ரூ. 1.25 கோடியும், கடந்த ஜூலையில் ரூ. 1 கோடியே 64 ஆயிரமும் என இரண்டு முறை நிதி அளித்துள்ளது. அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என மகிழும் வகையில் தமிழ்த்துறை நூலகத்தில் பொறுப்பில் உள்ள Dr.Sven Wortmann, Mr.Sharon Nathan, Mrs.Daria Lambercht ஆகியோரின் தமிழார்வம் அமைந்திருந்தது. தமிழில் எங்களுக்கு வரவேற்பளித்து, ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள சிரமங்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டு, சிலவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாக்குமாறு சொல்லி வழங்கினர். அவற்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைத்துப் பாதுகாக்கும் எண்ணத்துடன் பெற்றுக் கொண்டேன்.
தமிழ் மணம் வீசிய கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை. உலகின் எந்த மூலையிலிருந்தோ தமிழ் மீது ஆர்வம் கொண்டு ஆய்வில் ஈடுபடும் மொழியியல் அறிஞர்களுக்கு இந்த நூலகம் துணை நிற்பதையும், நூலகங்களின் பயனையும் தேவையையும் கருதி, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் சென்னையில் அமைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல, திராவிட மாடல் ஆட்சியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருப்பதுடன் திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் உலகத் தரத்திலான நூலகங்கள் அமைக்கப்பட்டு வருவதை எண்ணி மகிழ்ந்தபடியே கொலோன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.
செப்டம்பர் 1 கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். டசல்டோர்ப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
அதன் பின்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசும்போது, நான் வெறும் முதலீட்டுக்காக இங்கு வரவில்லை என்பதையும், ஜெர்மனி - தமிழ்நாடு எனும் இரண்டு பொருளாதார அரசுகளுக்கிடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்டினேன். ஜெர்மனியைப் போலவே தமிழ்நாட்டிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும், நிறுவனங்களுக்கேற்ற திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதையும் எடுத்துக்கூறி, தொழில்வளர்ச்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உங்களுடனான ஒரு பார்ட்னர் போல அரசு செய்து தரும் என்ற உறுதியை அளித்து, இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது என்ற நம்பிக்கையை விதைத்தேன்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜெர்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதல்-அமைச்சரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு NRW மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
செப்டம்பர் 2 அன்று காலையில் என்.ஆர்.டபிள்யூ (NRW) மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், NRW மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.