தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை கோவையில் தொடங்கிவைக்க இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) கோவை சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுக கோவை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது.கோவை மக்களின் அன்பு” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதையடுத்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
பின்னர், கோயம்புத்தூர், தர்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் குறித்து கேட்டறிந்தார்.
அடுத்து, சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, தி.மு.க நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒருநாளில் 2 மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள், வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கழகப் பணிக்கு ஒதுக்குங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
கோவையில் தி.மு.க நிர்வாகிகளுடன் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தி.மு.க நிர்வாகிகள் அவரவர் குடும்பத்திற்கும் நேரத்தை செலவிடுங்கள்; தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கும் கவனம் செலுத்துங்கள்; அதே சமயம் ஒருநாளில் 2 மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள், வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கழகப் பணிக்கு ஒதுக்குங்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.” என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க மீண்டும் மாபெரும் பெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி, அதனை கோவை மக்களின் வரவேற்பில் இருந்து தெரிந்து கொண்டேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.