தமிழக அரசு மாநில நிதியில் இருந்து தமிழக மக்களுக்கு நிறைவேற்றியுள்ள திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்ட மத்திய நிதி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பத்து நிமிட வீடியோவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். நெருக்கடியான காலத்திலும், பொங்கல் ரொக்கப் பரிசாக 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம், தனது திராவிட மாடல் அரசு மக்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தி.மு.க ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
தமிழக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன?” என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“