Advertisment

மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
CM MK Stalin calls for all party meeting on Mekedatu issue, Mekedatu new dam issue, all party meeting on july 12, மேகதாது அணை, மேகதாது அணை விவகாரம், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு, முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு அரசு, மேகதாது, திமுக, மேகேதாட்டு, dmk, tamil nadu govt, CM MK Stalin calls for all party meeting, karnataka govt, all party meeting on Mekedatu

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் படி ஜூலை 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு நீர் வரத்து பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மேகதாது பகுதியில் கட்டாயம் அணை கட்டப்படும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதையடுத்து, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, கர்நாடகா அரசு கட்ட உள்ள மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறினார்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எழுதிய பதில் கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என்று கர்நாடகா அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.

அதே போல, கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று (ஜூலை 9) வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஜுலை 12ம் தேதி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டம் ஜூலை 12ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்னை குறித்துத் தமிழகத்தின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்னை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவை கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்திலுள்ள அனைத்துச் சட்டப்பேரவைக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mekedatu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment