தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் மே 22ம் தேதி சட்டப் பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக, தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 30,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பால் தினமும் 300க்கு மேல் உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர் குழுவுடன் மே 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தார். ஆனாலும், தொடர்ந்து, தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. நிபுணர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் மே 22ம் தேதி காலை 11.30 மணிக்கு சட்டப்பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த அலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த வாரம் அமைக்கப்பட்ட, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில், இந்த குழுவில் இடம்பெற்ற திமுகவில் இருந்து டாக்டர் எழிலன், அதிமுகவில் இருந்து விஜயபாஸ்கர், சிபிஎம் - நாகை மாலி, பாமக - ஜி.கே.வாசன், மமக - ஜவாஹிருல்லா, விசிக - எஸ்.எஸ்.பாலாஜி, கொ.ம.தே.க - ஈஸ்வரன், புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, அவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"