/indian-express-tamil/media/media_files/2025/08/20/stalin-sudharshan-reddy-x-2025-08-20-06-31-53.jpg)
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி, 'மிகச் சரியான தேர்வு' என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Photograph: (Image Source: x/ @mkstalin)
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி மிகச் சரியான தேர்வு சரியான தேர்வு” என்று மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது… https://t.co/qspgcsnMKb
— M.K.Stalin (@mkstalin) August 19, 2025
இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர் ஆவார். நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது.
சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை!
நீட் விலக்கு, கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்பு பிரசாரம் தீவிரமாக முன்னெடுப்பு, இடைவிடாத இந்தி & சமஸ்கிருதத் திணிப்பு என அரசியலமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்து தீவிரமாகக் குரலெழுப்பி வருகிறது.
மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க, மதநல்லிணக்க உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.கழகக் கூட்டணி எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கே வாக்களித்துள்ளனர். எனவே, . சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதுதான் அவர்களது முடிவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்.
அரசியலமைப்பு, பன்மைத்துவம், சமூகநீதி, மொழியுரிமைகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடமளித்து அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு வாய்ப்பளிக்க கூடியவராக, சுதர்சன் ரெட்டி திகழ்கிறார்.
கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி மிகச் சரியான தேர்வு.” என்று முதலமைசர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.