Advertisment

நீட் தேர்வின் தாக்கம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
CM Stalin costitute a team headed justice AK rajan, நீட் தேர்வு, நீட் தேர்வின் தாக்கம், தமிழ்நாடு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன், நீட் தேர்வு, impact of NEET exam on tamil nadu, tamil nadu, Rtd justice AK rajan, NEET Exam, neet exam

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசியத் தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியின்போது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நீட் தேர்வை அமல்படுத்தியது. அதுவரை மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் நிறைய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அரியலூர் அனிதா உள்ளிட்ட பல மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் தமிழ்நாட்டை உலுக்கியது. அதனால், தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் தேர்வுக்கான எதிர்ப்பு இருந்துவருகிறது. அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு எதிர்த்து போராடுவோம். நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில்தான், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பிந்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும் அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்ககி முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.

இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினைஅமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  1. ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் - தலைவர்
  2. டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் - உறுப்பினர்
  3. டாக்டர் ஜவஹர் நேசன் - உறுப்பினர்
  4. அரசு முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்
  5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை - உறுப்பினர்
  6. அரசு செயலாளர், சட்டத் துறை - உறுப்பினர்
  7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
  8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்கம் - உறுப்பினர்
  9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு - உறுப்பினர் - செயலர் ஒருங்கிணைப்பாளர்

இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Mk Stalin Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment