மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 12) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆர்.எஸ் பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், துரைசாமி, மதிமுக சார்பாக எம்எல் பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக கே.பாலகிருஷ்ணன், பாமக சார்பாக ஜி.கே.மணி, வெங்கடேஷ், அரியலூர் சின்னப்பா, மதிமுக சார்பாக எம்எல் பூமிநாதன், பாமக சார்பாக ஜி.கே.மணி, வெங்கடேஷ், அரியலூர் சின்னப்பா, புரட்சி பாரதம் சார்பாக பூவை ஜெகன் மூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்ட 13 சட்டமன்றக் கட்சிகளின் பிரந்திநிதிகள் கலந்துகொண்டனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேகதாது என்ற இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு நீர் வரத்து குறைந்துவிடும் என்பதால் தமிழ்நாடு அரசு அணையைக் கட்டக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், அண்மையில், கர்நாடக முதலமைச்ச்ர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டாம் என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். எடியூரப்பாவின் கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால், மேகதாது அணை திட்டத்தைத் தொடரக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், மேகதாது அணையால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிபிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை மற்றும் மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள புதிய அணை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். இதனிடையே, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான், மேகதாது அணை பிரச்னையில் தமிழ்நாடு அரசு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (ஜூலை 12) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
மேகதாது அணை பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேகதாது பிரச்னை குறித்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சட்டமன்றக் கட்சியினர் ஆலோசனைக் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்:
“உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. அதை மீறி தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புட செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்ற்கு எதிரான இத்தகைய முயற்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீரமானம் 2:
“இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும் முழு ஒத்துழைப்பையும் வழங்கும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் 3:
“தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மெற்கொள்வது” என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.