போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, தி.மு.க-வின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் டெல்லியில் மார்ச் 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் பெயர் குறிப்பிடப்பட்டதை அடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி தி.மு.க தலைமை அறிவித்தது. அதே நேரத்தில், போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், தி.மு.க தலைவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைக் குறிப்பிட்டு, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை தொடர்புபடுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் விமர்சித்தனர்.
இந்நிலையில், போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (மார்ச் 14) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மார்ச் 8-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சரான என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதே விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“