முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக அவர் இன்று (ஜூன் 17) டெல்லி சென்றுள்ளார். ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்க்காவும் சென்றுள்ளார். மு.க.ஸ்டாலினுடைய டெல்லி பயணத்தில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் விரைவில் அரசு பயணமாக டெல்லி சென்று பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர்களையும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக தமிழ்நாட்டில் தொற்று பரவல் கடுமையாக இருந்ததால் கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விடுவதில் தீவிரமாக இருந்தார்.
மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பயணமாக டெல்லி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், இவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோர் இன்று (ஜூன் 17) காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்கள். டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக எம்.பி டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜய உள்ளிட்டோர் வரவேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேராக டெல்லி ஓ.டி.ஐ.எஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தைப் பார்வையிட்டார். டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். மேலும், திமுக அலுவலக மாதிரி வரைபடத்தைப் பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், முஹ்டலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அரசு பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்கள் டெல்லியில் தங்குகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அவரிடம் நீட் தேர்வு ரத்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களை விடுதலை செய்வது, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூ வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தங்கிய அதே சூட் ரூமில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2016ம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 2016, ஜூன் மாதம் ரசு முறை பயணமாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அவருக்காக தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்ட சூட் ரூம் பெட்ரூம், டைனிங் ஹால், வரவேற்பரை, மேக்கப் ரூ, ஒரு சிறிய சமையலறை, பாத்ரூம் என பல வசதிகளைக் கொண்டிருந்தது. ஜெயலலிதா தனது டெல்லி பயணத்தின்போது தமிழ்நாடு இல்லத்தில் உள்ள சூட் ரூமில்தான் தங்கினார். இந்த சூட் ரூமில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி யாருமே தங்கியதில்லை. எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் டெல்லி சென்றபோது இந்த ரூமை பயன்படுத்தியதில்லை.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பிறகு, கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர்கள், ஆளுநர்கள் அரசு முறை பயணமாக டெல்லி செல்லும்போது தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது வழக்கம். அதற்காகத்தான் டெல்லியில் இந்த தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டது.
தேர்தலுக்கு முன்னதாக 2021, ஜனவரி மாதம் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா தங்கிய சூட் ரூமை பார்வையிட்டாராம். அப்போது, அடுத்தமுறை டெல்லி வரும்போது, இந்த சூட் ரூமில் தங்குவேன் என்றும் அதற்காக சில வசதிகளை செய்துவையுங்கள் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தாராம். ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாடு மக்கள் ஆட்சியை மாற்றிவிட்டார்கள்.
ஆட்சிய மாறிய பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேச டெல்லி 3 நாள் அரசு பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் ஜெயலலிதா தங்கிய அதே சூட் ரூமில் தங்குகிறார் என்பது கவனம் பெற்றுள்ளது.
அதே போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினும் டெல்லி சென்றுள்ளார் என்பது கவனத்தைப் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் அவருடைய உடல்நிலையை சரியாக கவனிக்காமல் இருக்கிறார். இந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மு.க.ஸ்டாலின் உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மிகவும் அக்கறையுடன் இருக்கிறார். அதனால், மு.க.ஸ்டாலினுக்கு நேரத்திற்கு சாப்பாடு உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலினுடன் துர்கா ஸ்டாலினும் டெல்லி சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய டெல்லி பயணத்தில் பல சுவாரஸ்யமான தகவல்களும் இடம்பெற்றுளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.