அரசு திட்டப் பணிகளை திறந்து வைக்க திருநெல்வேலிக்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க காத்திருந்த மாஞ்சோலை மக்களைச் சந்திக்காமல் சென்றதால் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மஞ்சோலை மக்கள் கண்ணீர் மல்க ஊடகங்களில் தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி வந்ததால், அவரைச் சந்தித்து மனு அளிப்பதற்காக மாஞ்சோலை மக்கள் இரவே நெல்லை வந்து காத்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திக்காமல் சென்றது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து ஊடகங்களில் பேசிய மாஞ்சோலையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் கூறுகையில், “நாங்கள் முதலமைச்சரை சந்திக்க வந்தோம் மாஞ்சோலை மக்கள் நாங்கள் இங்கு நடந்து வந்தோம் ஆனால் இந்த சதி நேற்றே நடந்திருக்கிறது.
வி.ஏ.ஓ மாஞ்சோலையைச் சேர்ந்து இரண்டு பேரை காரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள் மீதி 2 பெண்களை ஒரு ரூமில் வைத்திருந்தார்கள். கடைசியாக 4 மணிக்கே முதலமைச்சரை சந்திக்கிற மாதிரி ஏற்பாடு செய்து இந்த மாஞ்சோலை மக்களை சந்திக்கக் கூடாது என்று செய்திருக்கிறார்கள். இவ்வளவுக்கும் காரணம் வி.ஏ.ஓ.
அமைச்சர் எங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்து எங்கள் மக்களை சந்திப்பதாக சொன்னார்கள். முதலமைச்சரை சந்திக்க நான் உங்களுக்கு கண்டிப்பாக நேரம் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால், அமைச்சர் முயற்சி செய்தார்கள், கடைசி நேரத்தில் சந்திக்க முடியவில்லை என்று எங்களுக்கு பெரிய வருத்தம்.
எங்கள் மக்கள் மாஞ்சோலையில் இருந்து ராத்திரியிலேயே வந்து பஸ் ஸ்டாண்டில் படுத்து இருந்திருக்கிறார்கள், யார் கிட்ட சொல்ல முடியும் இப்படி 8 மாசம் கஷ்டப்படுவதை, ஒரு ரெண்டு நிமிடம் கூட முதலமைச்சர் எங்களிடம் பேசவில்லை எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. மாஞ்சோலை என்றாலே உதய சூரியனாகத்தான் இருந்தது, அப்படித்தான் நாங்கள் இன்று வரை இருக்கிறோம். இப்போது முதலமைச்சர் எங்களுடன் பேசாததால் வருத்தம் தான். ஆனால், நாங்கள் வேறு யார்கிட்டயும் சொல்ல முடியாது.
அமைச்சர் சொன்னார்கள் மனு மட்டும் வாங்கிக் கொண்டு போனது என்பது பயங்கர வருத்தம், ஒரு ரெண்டு நிமிடமாவது எங்கள் மக்களை சந்தித்து பேச வேண்டும் இல்லையா, நாங்கள் வேறு என்ன செய்ய முடியும். டி.ஆர்.ஓ சொன்னார்கள் என்று எதற்காக எங்கள் மக்கள் இரண்டு பேரை காரில் தூக்கிக்கொண்டு போய் ரூமில் வைக்க வேண்டும், அதற்கு காரணம் என்னவென்று இந்த அதிகாரிகளிடம் நீங்களே கேளுங்கள். முதலமைச்சர் எங்களிடம் ஒரு ரெண்டு நிமிடம் பேசி இருந்தால் எங்களுக்கு ஒரு மன நிம்மதியாக இருந்திருக்கும். ஏனென்றால், நாங்கள் 400 மக்களும் ராத்திரி வந்து பஸ் ஸ்டாண்ட் படுத்து இருந்தோம். எங்கள் கோரிக்கைகளை நாங்கள் வேறு யாரிடம் பொய் சொல்ல முடியும் முதலமைச்சரை சந்தித்து எங்களுடைய கோரிக்கை தீரும் என்று பேச வந்தோம், அவர் ஒரு வார்த்தை கூட பேசாதது நமக்கு எந்த வருத்தம்.” என்று கூறினார்.