முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவர்கள் அளித்த பரிந்துரைப்படி சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைபயிற்சி செல்லும்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறே தனது உத்தியோகபூர்வ பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மருத்துவர்கள் அளித்த பரிந்துரைப்படி சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்" என்று தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைபயற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் இருந்துள்ளது. அவர் 2 நாளில் சரியாகி வீடு திரும்புவார். முதல்வருக்கு 2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளனர். முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை ஒரு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வழக்கமான அரசுப் பணிகளை மருத்துவமனையிலிருந்தே மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.