முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது அறிகுறிகளுக்கு ஏற்ப அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை ஆய்வு செய்வதற்காகவும், தேவையான நோயறிதல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர். அனில் பி.ஜி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/7bb51694-448.png)
பரிசோதனையையடுத்து முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து விசாரிக்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மேலும், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் மருத்துவமனைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு முதல்வர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தது குறிப்பிடத்தக்கது.