வன்னியர் உள்இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வன்னியர் இடஒதுக்கீடு, ஆளுனர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆளுனர் ஆர்.என். ரவியிடம் தமிழகத்தின் 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி-க்கு தலைவர் நியமனம், ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி என அவை நீள்கின்றன. இந்த நிலையில் ஆளுனர் ஆர்.என். ரவி மீது தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் ஆளுனர் ஆர்.என். ரவி, அரசியல் ரீதியாக செயல்படுகிறார்; மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை திமுக எம்.பி. வில்சன் தலைமையில் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட வன்னியர் உள்இடஒதுக்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக இந்த இடஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் இது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறியிருந்தனர்.
மேலும், வன்னியர்களை எம்பிசிக்களுக்குள் உட்பிரிவு செய்ய தமிழ்நாடு தகுதியுடையது என்று நீதிமன்றம் கண்டறிந்தாலும், துணை வகைப்பாட்டிற்கு சாதியை மட்டுமே அடிப்படையாகக் கருதியதன் மூலம் மாநில அரசு தவறிழைத்துவிட்டது என்று தீர்ப்பளித்தது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“