/indian-express-tamil/media/media_files/ChRob9RLdKhGdsYmiNo8.jpg)
மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சிகளில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 11-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில், ‘மக்களுடன் முதல்வர் திட்டத்தின்’ விரிவாக்க நிகழ்ச்சியிலும், ஜூலை 15-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.
அதேபோன்று, அதே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்நிலையில், மாவட்டங்களில் நடைபெறும் மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் தன்னால் 18.12.2023 தொடங்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்" என்ற திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்மூலம், மொத்தம் 8.74 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட திட்டமிட்டு, வருகிற ஜூலை 11-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தான் அதனைத் தொடங்கி வைக்கவிருப்பதாகவும், அன்றையதினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர் பெருமக்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்க உள்ளார்கள். மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோன்று, 15-9-2022-ல் தன்னால் தொடங்கி வைக்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவகிறது. இந்த திட்டத்தின் மூலம் 14,40,351 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, பல்வேறு ஆய்வுகளின் மூலமும், தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளதோடு, சத்தான உணவை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகப் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதை கண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாக திட்டக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற தமது அரசின் உன்னத நோக்கத்தை எய்திடும் வகையில், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான 15-7-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், தான் அதைத் தொடங்கி வைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும்; மேலும் 15-7-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ள மேற்படி திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.