Advertisment

‘கச்சத் தீவு மீட்பு’ தேர்தல் நேர முழக்கமாக பயன்படுத்தும் பா.ஜ.க; மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஸ்டாலின் கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், பா.ஜ.க-வின் தேர்தல் நேர முழக்கம் கச்சத்தீவு மீட்பு என்ன ஆனது என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin Jaishanka

“தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பா.ஜ.க-வின் தேர்தல் நேர முழக்கம் கச்சத்தீவு மீட்பு என்ன ஆனது என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரா தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. IND-TN-10-MO-1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1, அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

1974-ம் ஆண்டிலிருந்தே, அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஜூன் 27 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள முதல்வர், திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது தலைவரும், அப்போதைய தி.மு.க தலைவருமான கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில் “மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

பா.ஜ.க தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment