முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் மதுரை செல்கிறார் அங்கே, நீண்ட நாட்களாக தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் மதுரையில் சகோதரர்களுக்கு இடையிலான பாசக் காட்சிகள் அரங்கேறும் என்று திமுகவினர் எதிர்ப்பார்க்கின்றனர்.
திமுகவில் மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி இடையே அரசியல் போட்டியின் உச்சத்தில், கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, மு.க.அழகிரி திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு, மு.க.அழகிரி திமுகவில் சேர்பதற்கான எந்த சமிக்ஞைகளும் இல்லாத நிலையே இருந்தது.
மு.க.அழகிரி தனது தம்பி மு.க.ஸ்டாலின் முதல்வராகவே முடியாது என்றதோடு கடுமையாக விமர்சித்தார். அதே போல, கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சி தொடங்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் அப்படி எதுவும் கட்சி தொடங்கவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் எந்த இடத்திலும் மு.க.அழகிரியைப் பற்றி வெளிப்படையாக விமர்சித்ததில்லை. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு, மு.க.ஸ்டாலின் ஓரு ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், மு.க.அழகிரி பற்றி கேட்டபோது அவர் எனது அண்ணன் என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வராக பதவியேற்க இருந்த மு.க.ஸ்டாலினுக்கு அவருடைய சகோதரர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், முதல்வராக பதவியேற்கும் தனது தம்பியை நினைத்து பெருமைப்படுவதாக மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக மு.க.அழகிரி கலந்துகொள்ளவில்லை. ஆனால், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் அவருடைய மகள் என கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு வந்த துரை தயாநிதியை ஸ்டாலினுடைய மகன் உதயநிதி கட்டி அணைத்து வரவேற்றார். மு.க.அழகிரியும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போதே, மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி இடையே நிலவிய அரசியல் போட்டி முடிவை நோக்கி செல்வதாக கூறப்பட்டது.
மு.க.அழகிரி கொரோனா தொற்றால் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்கு வரமுடியவில்லை என்று கண்டிப்பாக விரைவில் சென்னைக்கு வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில்தான், மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய கோவை, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு மே 20, 21 என 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். இன்று மதுரை வருகிற மு.க.ஸ்டாலின் விரைவில் மு.க.அழகிரியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
மு.க.அழகிரி தனது தம்பி மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அண்ணனை முந்திக்கொண்டு மு.க.ஸ்டாலின் விரைவில் தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, அண்ணனும் தம்பியும் சந்திக்கும்போது பாசக் காட்சிகள் அரங்கேறும் என்று திமுகவினர் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.