Cm-mk-stalin | governor-rn-ravi: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, மதுரை தெப்பக்குளம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
ஸ்டாலின் தாக்கு
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், 'ஆளுநர் பா.ஜ.க-வாக மாறியுள்ளார், ஆளுநர் மாளிகை பா.ஜ.க அலுவலகமாக மாறியுள்ளது என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வெளியே தெருவில் தான் வீசப்பட்டது. அதற்கான சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. ஆளுநர் பா.ஜ.க-வாக மாறியுள்ளார். ஆளுநர் மாளிகையும் பா.ஜ.க அலுவலகமாக மாறியுள்ளது. அதுதான் வெட்கக்கேடு" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“