சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். மழைக் காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டோம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தங்கும் இடங்கள், உணவுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயாராக இருக்க வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேரிடரின்போது மின்வெட்டு, பராமரிப்பு பணி குறித்து நுகர்வோருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். சாலைப் பணி நடக்கும் இடங்களில் தடுப்புச் சுவர்கள், வேலிகள், ஒலிரும் டைவெர்ஷன் போர்டுகள் வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.