தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒரு திட்டக் குழு முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த குழு தொடர்ந்து பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தது. இந்த சூழலில்தான் 2020ம் ஆண்டு மாநில திட்டக்குழு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு என்று மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்குதல், கொள்கை உத்திகளை வழங்குதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் ஆகிய பணிகளை செய்து வருகிறது.
இந்த சூழலில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து இன்று (ஜூன் 6) உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் மாநில திட்டக் குழு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதலமைச்சரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாநில திட்டக் குழுவானது, கடந்த எப்ரல் 23, 2020-ல் ‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக’ மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர் ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், திராவிட கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகளையும் பொருளாதார திட்டங்களையும் ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களில் தொடர்ந்து ஆதரித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல, இந்த குழுவில் மருத்துவர் கு.சிவராமன், பரதநாட்டியக் கலைஞரும் திருநங்கையுமான முனைவர் நர்த்தகி நடராஜன் இடம் பெற்றுள்ளார்கள் என்பது கவனம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.