ஆட்சி சக்கரத்தை தி.மு.க இயக்கியனாலும் திட்டக்குழுதான் வழிகாட்டி என்றும், மாநில திட்டக்குழு அறிக்கைதான் தி.மு.க ஆட்சியின் ‘மார்க் ஷீட்’ என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 5-வது மாநில திட்டக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும், திட்டக்குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சி சக்கரத்தை தி.மு.க நடத்தினாலும் எங்களின் முக்கிய வழிகாட்டி திட்டக்குழுதான். திட்டக்குழு அறிக்கை தான் எங்கள் ஆட்சியின் மார்க் ஷீட் என்று கூறினார்.
மாநில திட்டக்குழுவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகள் கூடியுள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரிகளுக்கு மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகியவை ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆட்சி சக்கரத்தை இயக்கவோர்களாக நாங்கள் இருந்தாலும் அதற்கு வழிகாட்டுவோர்களாக திட்டக்குழு உள்ளது. ஆட்சி நிர்வாகம் செல்லும் பாதையை தீர்மானிப்பவர்களாக மட்டுமன்றி அதில் உள்ள நிறை குறைகளை எடுத்து சொல்வதாகவும் திட்டக்குழு உள்ளது. எனக்கும் அமைச்சரவைக்கும் ஆட்சிக்கும் மிக மிக முக்கியமான வழிகாட்டியாக திட்டக்குழு உள்ளது.” என்று பாராட்டிப் பேசினார்.
“மாநில திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன்முதலாக அமைத்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களையும் தன்னிறைவுபெற்ற மாவட்டமாக உருவாக்கினோம். நிதிவளத்தை பெருக்கும் ஆலோசனைகளை வழங்க மாநில திட்டக்குழுவுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திராவிட மாடல் அரசின் சாதனைகளை கூறும் வகையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்த வேண்டும்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
“ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியிலும் இருக்கக் கூடாது; சமூக ரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கவனம் பெறாத துறைகளுக்கான புதிய திட்டங்களை உருவாக்க மாநில திட்டக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம்.” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்த கூட்டத்தில் திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“