முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (5.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “
காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ள இருக்கக்கூடிய மாபெரும் சவால்; இதை நமது அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது. சொல்வது மட்டுமல்ல; அதை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறோம். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில், நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறோம்.
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் -
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் -
பசுமைத் தமிழ்நாடு இயக்கம் -
தமிழ்நாடு ஈரநில இயக்கம் -
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதுபோன்ற இயக்கங்கள், திட்டமிடுதல்கள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த இயக்கங்களுக்குக் கொள்கை வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவை தமிழ்நாடு அரசு உருவாக்கி, பொருளியல் அறிஞர் மாண்டேக் சிங் அலுவாலியா, சுற்றுச்சூழல் ஆர்வலர் எரிக் சோல்-ஹெய்ம், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன், நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் இயக்குநர் பேராசிரியர் ரமேஷ் ராமச்சந்திரன், அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய முன்னாள் இயக்குநர் முனைவர் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்திருக்கிறோம்.
காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் மாநில செயல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதுதான் இந்தக் குழுவின் கடமை.
மாநில மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும், அரசின் அனைத்துப் பணிகளும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் குறிக்கோள்களுடன் இணைந்து அமைவதை உறுதிசெய்வதும் இந்தக் குழுவின் கடமை.
Addressed the Tamil Nadu Governing Council on Climate Change today. Tamil Nadu is a pioneer in combating #ClimateChange with visionary initiatives like:
— M.K.Stalin (@mkstalin) December 5, 2024
✅ Green Tamil Nadu Mission
✅ Wetland Restoration Initiatives
✅ Neithal Restoration Mission
✅ Net Zero by 2070 Roadmap… pic.twitter.com/3a7s4nQEuh
என்னுடைய தலைமையிலான இந்தக் குழு தான், இந்தியாவிலேயே காலநிலை மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட முதல் நிர்வாகக் குழு. அந்த வகையில், தமிழ்நாடு, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக அமைந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது.
2070-ஆம் ஆண்டுக்குள், ‘நெட் ஜீரோ எமிஷன்’ எட்டுவதற்கான வழிகாட்டியாக இந்த காலநிலை மாற்ற இயக்கம் திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக உருவாக்கப்பட்டுள்ள ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கம்’ மூலம், பயோடைவர்சிட்டியை (Biodiversity) முன்னிறுத்தவும் கார்பன் சின்க்-கை (Carbon Sink) அதிகரிக்கவும், ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கிறது.
நம் மாநிலத்திற்கு இயற்கை அரணாக விளங்கக்கூடியது, மிக நீண்ட நெடிய கடற்கரை; அதை வலுப்படுத்துகின்ற வகையில், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் மூலமாக, ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ‘அலையாத்திக் காடுகள்’, ‘கடல் புற்கள்’ மற்றும் பிற Critical Habitats (பல முக்கியத்துவம் வாய்ந்த கடல் வாழிடங்கள்) உருவாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழல் அமைப்புகள், Carbon Zinc-களாகவும், கடல் அரிப்பிலிருந்து கடற்கரைகளைப் பாதுகாப்பதாகவும் அமையும்.
தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக இருக்கிறது. காற்றாலை மூலம், ஆண்டுக்கு 11 ஆயிரத்து 900 மில்லியன் யூனிட் மின்சாரமும் கிடைக்கிறது.
2030- ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய 50 விழுக்காடு ஆற்றல், ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ மூலம் பெறுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் காலநிலைத் திட்டத்தில் முக்கியத் தூணாக விளங்குவது, ‘ஊரக நீர்ப் பாதுகாப்பு’.
2024-2025-ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் 500 கோடி ரூபாய் முதலீட்டில், 5000 சிறிய நீர்ப்பாசன குளங்கள் அமைக்கப்பட இருக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 701 இயற்கை வள மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகள் மூலம், 100 நாள் நீர் சேகரிப்பு இயக்கமானது, நீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், 1.3 இலட்சம் நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கியிருக்கிறது.
12 மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகும் வண்ணம் நவீனப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், 2,477 நகர்ப்புற நீர் நிலைகளை மறுசீரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், நீரின் அளவையும் தரத்தையும் அதிகரித்து நகர்ப்புறங்களின் நிலைத்தன்மையை வலுப்படுத்தியிருக்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு, காவிரி கழிமுக பகுதியில், பருவநிலை மாறுதல் தழுவல் திட்டம், கடற்கரை மாவட்டங்களை புயல்களிலிருந்து பாதுகாத்தல், காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படும் வெள்ள அபாயங்களை தணித்தல், பாசன வசதியை மேம்படுத்துதல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் முதல் பகுதியாக, அடப்பாறு, ஹரிச்சந்திரா நதி, வெள்ளையாறு, பாண்டவையாறு, வளவனாறு, வேதாராண்ய கால்வாய் ஆகிய 6 ஆறுகள் மற்றும் 13 நீரேற்று நிலையங்களின் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வெண்ணாறு, பாமினியாறு, கோரையாறு, மனங்கொண்டனாறு, மரக்கா கோரையாறு, கடுவையாறு ஆகிய 6 ஆறுகள் மற்றும் 6 நீரேற்று நிலையங்களை மேம்படுத்துவதற்காக, முதல்நிலை திட்ட அறிக்கை ஆயிரத்து 825 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்யப்பட்டு, இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறைக்கு, கடனுதவி வேண்டி சமர்ப்பிக்கப்பட்டு, ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இவை அனைத்துமே, இயற்கையைப் பாதுகாப்பதில் நம் மாநிலம் முன்னணியில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் முயற்சிகளால், தமிழ்நாட்டில் இருந்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து 18-ஆக அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் முக்கியத்துவம் வாய்ந்த சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் நம்முடைய அரசுக்கு உறுதிப்பாட்டை நீங்கள் அறியலாம்.
தமிழ்நாட்டின் காலநிலை முன்னெடுப்புகளின் வெற்றிக்குக் காரணமாக இருப்பது, பொதுமக்கள் பங்கேற்புதான் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
“மீண்டும் மஞ்சப்பை” போன்ற பரப்புரைகள் துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகரித்திருக்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை கணிசமாக குறைத்திருக்கிறது. முன்பு இருந்ததைவிட, இப்போது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே, குறிப்பாக, இளைஞர்களிடையே அதிகமாகி இருக்கிறது.
இந்த விழிப்புணர்வை பயன்படுத்தி திட்டங்களைத் தீட்டி வருகிறோம். வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான குழு சொல்லி இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம்.
வெப்ப அலையை, மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நீர்ச்சத்து மிகுந்த பொருட்களை வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியது. வெப்ப அலை மேலாண்மை தொடர்பாக என்னுடைய தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவற்றில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில், ஐந்தாவது பெருநகரமாக சென்னை இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும், காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்கும், C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை மாநகராட்சி இணைந்துள்ளது. அந்தளவு முன்னெச்சரிக்கையாக அரசு செயல்பட்டு வருகிறது.
'காற்று மாசுபாடு’ சமீபகாலமாக ஒரு தீவிரமான சுகாதார சவாலாக மாறியிருக்கிறது' என்று ஐ.நா. சொல்லியிருக்கிறது. நம்முடைய இந்தியத் தலைநகர் தில்லியில் அதனுடைய பாதிப்புகளைப் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு திட்டங்களைத் தீட்டவேண்டும்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு இங்கு நான் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும், பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக நினைத்து தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். அதற்காகதான், நீர்நிலைகள் மறுசீரமைப்பு, Climate-Resilient Cities உருவாக்குவது, Biodiversity-யைப் பாதுகாக்குகிறது என்று முன்னெடுப்புகளை எடுக்கிறோம்.
இந்தப் பயணத்தில் சேர்ந்து, தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆலோசனைகளும் வழங்க உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
நாம் அனைவரும் இணைந்து, தமிழ்நாட்டை உலக அரங்கில் காலநிலை மீள்திறன் மற்றும் நீடித்த நிலைத்த வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முன்னோடியாக மாற்றிக் காட்டுவோம் என்பதை இந்தக் கூட்டத்தின் மூலமாக உறுதி எடுத்துக்கொண்டு, செயல்திட்டங்களை முன்னெடுப்போம்.
நம்முடைய வழித்தோன்றல்களாக இந்த பூமியில் வாழப்போகின்ற குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான இயற்கைக்கு கேடுகள் விளைவிக்காத உலகத்தை வழங்க நம்முடைய வாழ்நாளில் திட்டங்களை முன்னெடுத்தோம்; அதில் வெற்றிப் பெற்றோம் என்று வரலாறு சொல்லவேண்டும். அதுதான் காலத்துக்கும் நமக்கான பெருமை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.