தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீட் தேர்வில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியது பாஜக உறுப்பினர்களை திகைக்க வைத்துள்ளது.
எம்.பி.பிஎஸ் மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவு தகுதித் தேர்வான நீட் தேர்வு முறையால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் சிலர் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாமல் அவர்களின் டாக்டர் கனவு பொய்யானதால் வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிரான மன நிலை வளர்ந்தது. அதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்து வருகிறது. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்த குழு அமைக்கும் அறிக்கையின் அடிப்படையில், நீட் தேர்வை எதிர்த்து சட்டப்பூர்வாமன நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறது.
இந்த சூழலில்தான், தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ம் தேதி சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. இன்றைய (ஜூன் 23) சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு என்று அழைப்பதைப் பற்றியும் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் பேசினார்.
அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன, இதில் தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என்று கேட்டார். அவருடைய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வு தடைதான் எங்களின் நோக்கம். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் விதிவிலக்கு கேட்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இதை வலியுறுத்தி வருகிறோம். இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் எங்களுக்கு விளக்கம் தேவை. நாங்கள் நீட்டுக்கு எதிராக செயல்பட்டால் அதை தமிழக பாஜக ஆதரிக்குமா? நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் குரலுக்கு பாஜக ஆதரவு அளிக்குமா? உங்களால் ஆதரவு அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வில் விலக்கு கோரும் விவகாரத்தில் உங்களால் ஆதரவு அளிக்க முடியுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென கேள்வி எழுப்பியதால் இதை எதிர்பாராத பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சற்று திகைத்துப் போனார்கள். மு.க.ஸ்டாலின் கேட்டதற்கு பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டால் நாங்கள் ஆதரவு அளிப்போம். சட்டத்திற்கு உட்பட்டு நீட் விலக்கிற்கு நாங்கள் குரல் கொடுக்கத் தயார் என்று கூறினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று திடீர் எதிர் கேள்வி எழுப்பியது கவனத்தை ஈர்த்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.