Advertisment

கால் நூற்றாண்டு மாவட்டச் செயலாளர்… ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய பரிதாபம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய நிகழ்ச்சிதான் டாக் ஆகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM MK Stalin refuse to meet Suresh Rajan, CM MK Stalin, Suresh Rajan, முக ஸ்டாலின், சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி, திமுக, Kanyakumari, Tamilnadu, DMK, urban local body polls

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் திமுக மாவட்டச் செயலாளராகவும் மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராகவும் வலம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய நிகழ்ச்சிதான் டாக் ஆகியுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஸ்வீப் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி திமுகவினருக்கும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியான செய்தியான செய்திதான் என்றாலும், மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற மறைமுகத் தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கட்சித் தலைமையின் அறிவிப்பை மீறி திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மு.க. ஸ்டாலின் கடும் கோபம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல், திமுக தலைமை அறிவித்த திமுக வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவிலேயே போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கி வெற்றி பெற்றனர்.

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களால் தான் கூனிக் குறுகி நிற்பதாகவும் அதனால், கூட்டணி கட்சிகளின் இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். பதவி விலகிய பின் தன்னை வந்து சந்திக்க வேண்டும். பதவி விலகாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை தெரிவித்தார். அதோடு, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சிலர் பதவி விலகினார்கள். சிலர் பதவி விலக மறுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் மீது திமுக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறது.

இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டவர்களைக் கட்டுப்படுத்தாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவின் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ கோ. அய்யப்பன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதே போல, பூந்தமல்லி நகரச் செயலாளர் ரவிகுமார், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் ஆகியோர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரான முன்ன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது நடவடிக்கை எடுத்தது திமுகவில் பலருக்கும் ஸ்டாலின் எந்த அளவுக்கு கோபமடைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தியுள்ளது.

சுரேஷ் ராஜன்

திமுக 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான அமைச்சரவையில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வான கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் சுற்றுலாத்துறை அமைச்சரானார். அதற்கு பிறகு, சுரேஷ் ராஜனுக்கு திமுகவில் ஏறுமுகம்தான். அமைச்சரான பிறகு, திமுகவில் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதிலிருந்து, சுரேஷ் ராஜன் 23 ஆண்டுகள் கிட்டத்தட்ட கால் நூற்றாடு காலம், திமுகவில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இடையில்தான், நிர்வாக வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம், கிழக்கு மேற்கு என்று பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். சுரேஷ் ராஜன் கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.

1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் மட்டுமல்ல, 2006-2011 ஆட்சியிலும் சுரேஷ் ராஜன் அமைச்சராக பதவி வகித்தார். சுரேஷ் ராஜன் அப்போது பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரானார். சுரேஷ் ராஜன் கட்சியைத் தாண்டி ஸ்டாலின் குடும்ப நண்பராகவும் இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், சுரேஷ் ராஜன் தோல்வியடைந்ததால், அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியாமல் போனது. ஆனால், அதே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. மேலும், முன்னதாக நாகர்கோயில் நகராட்சி சேர்மனாக இருந்த மகேஷ்குமார் மாநகர செயலாளராக அறிவிக்கப்பட்டு தற்போது மேயராகவும் ஆகியிருக்கிறார்.

சுரேஷ் ராஜனுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் அவருடைய ஆதரவாளரான மகேஷ்குமாருக்கும் இடையே சிறு மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு, ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சுரேஷ் ராஜன் மீது நடவடிக்கை பாய்ந்தது தான் பலருக்கு ஆச்சரியம் அளித்திருக்கிறது.

இதற்கு காரணம், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, நாகர்கோயில் மாநகராட்சியில், திமுக பெரும்பான்மை வார்டுகளை வென்று அதிக கவுன்சிலர்களைக் கொண்டிருந்தாலும், பாஜக சார்பில் மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தும் அறிவித்தபோதே திமுக தலைமை நாகர்கோயில் நகராட்சியைக் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டது.

நாகர்கோயில் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், பாஜக வெற்றி பெறக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்தது. அதனால், திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவு பறந்தது. ஆனால், கன்னியாகுமரியில் மறைமுகத் தேர்தலில் உள்ளடி வேலை நடப்பதாக உளவுத்துறை முதலமைச்சருக்கு ரிப்போர் அனுப்பியது.

இதையடுத்துதான், உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பிஸியாக இருந்த மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூச்சி முருகனை, நாகர்கோயில் மாநகராட்சி மேயர் பதவியை உறுதி செய்ய அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார். ஒருவழியாக, நாகர்கோயில் மாநகராட்சியில் திமுக மேயராக மகேஷ்குமார் வெற்றி பெற்றார். அதே நேரத்தில், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது திமுகவில் நடந்த உள்ளடி வேலைகள் பற்றிய ரிப்போர்ட்டும் திமுக தலைமைக்கு போனது.

இதையடுத்துதான், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தார். மேயர் மகேஷ் திமுகவின் கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்டச் செயலாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், திமுக தலைமை சுரேஷ் ராஜன் மீது இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும், சுரேஷ் ராஜன் முதலைச்சர் ஸ்டாலினை நேரில் சத்தித்து பேசி சமாதானப்படுத்திவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்திருக்கிறார். ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்ச் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சுரேஷ் ராஜன், ஸ்டாலினை சந்தித்துப் பேச தூதுவிட்டிருக்கிறார். ஆனால், ஸ்டாலின் பேச மறுத்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான சுரேஷ் ராஜன், கன்னியாகுமரியில் ஆய்வு செய்தபோது உடன் இருந்தும் எதுவும் பேசாமலே இருந்துள்ளார்.

பிறகு, சுரேஷ் ராஜன், அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். ஆனால், ஸ்டாலின் சந்தித்துப் பேச மறுத்துவிட்டதாகவும் அவரை திமுக பொதுச் செயலாளரைப் போய் பார்க்கச் சொன்னதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரியில் திமுகவில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு மாவட்டச் செயலாளராக இருந்து, கன்னியாகுமரி மாவட்ட திமுகவின் செல்லப்பிள்ளையாக ஸ்டாலினுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மிக நெருக்கமானவராக வலம் வந்த சுரேஷ் ராஜன் இன்று ஸ்டாலினை சந்திக்க முடியாமல் தடுமாறிய பரிதாபநிலைதான் திமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் டாக் ஆகியுள்ளது. சமாதானம் ஆகுமா திமுக தலைமை என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment