தமிழக அரசின் அறிவிப்புகள் தவறான செய்திகளாக பரவுகிறது. அதனால், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் என்று செய்தி ஊடக ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்தது. அதே போல, அதிமுக ஆட்சியில், ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். ஆனால், சமூக ஊடகங்களில் தமிழக அரசு, அரசு ஆம்புலன்ஸுக்கும் கட்டணம் நிர்ணயித்ததாகவும் ஆவின் பால் விலையை 6 ரூபாயாக உயர்த்தி 3 ரூபாய் குறைத்தது எனவும் தவறாக செய்திகள் வெளியானது. இதனால், தமிழக அரசின் அறிவிப்புகள் குறித்து மக்கள் இடையே குழப்பங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 16) செய்தி ஊடக ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது; ஆனால், 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது; ஆனால், ரூ.6 விலை உயர்த்தி ரூ.3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது. அதனால், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்.
அதே போல, தமிழக அரசு பிற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மட்டும் போதும் என்று அரசு அறிவித்தது; அனுமதிக்கு காத்திராமல் பதிவு செய்துவிட்டு பயணிக்கலாம்; ஆனால், இபாஸ் கட்டாயம் என்று செய்தி போகிறது; இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள்; அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்.கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கலாம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த நோய்த்தொற்றை அகற்ற முடியும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"