உலகத் தமிழர்கள் தமிழக மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 13) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், உலகத் தமிழர்கள் நிதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பாதவது, “கொரோனா என்கிற பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இதை வென்று மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் இப்போது மிக முக்கியமான 2 நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று இப்போது கொரோனா என்கிற நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிப்பதற்கான முன் முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக செய்துகொண்டுவருகிறது.
கொரோனா என்கிற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்குள்ளானவர்களை காக்கும் பணிகளில் கண்ணுங்கருத்துமாக தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் இப்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு கொரோனா நிவார நிதியை அரசு வழங்கி வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக மோசமானதாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள், தடுப்பூசிகள், ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும். படுக்கைகள், மருந்துகள், ஆக்ஸிஜன்கள் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பணியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குவீர் என்று நான் வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்தோடு பலரும் நிதிகளைக் கொண்டுவண்டு வழங்கி வருகிறார்கள். பலரும் நிதி திரட்டி வருகிறார்கள். அமெரிக்க வாழ் தமிழ் தொழில் முனைவோர் சங்கம், வட அமெரிக்காவின் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம், கலிஃபோர்னியா தமிழ் அகாடமிக் போன்ற அமெரிக்காவில் உள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து சரியான இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு உதவுவதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். புலம்பெயர்ந்து சென்ற மக்கள் தாய்த் தமிழகத்தை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பதன் அடையாளம்தான் இது போன்ற நிதி திரட்டும் நிகழ்வுகள் ஆகும். தனக்காக மட்டும் வாழாமல் ஊருக்காக உலகத்துக்காக வாழும் உங்கள் உயர்ந்த உள்ளத்துடைய வெளிப்பாடுதான் இந்த முன்னெடுப்பு ஆகும்.
மிகவும் சிக்கலான நெருக்கடியான இந்த நேரத்தில், தமிழ்நாட்டுக்கு மாபெரும் உதவியை செய்ய முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களே நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். தமிழக மக்களாகிய நாங்களும் உங்களை மறக்க மாட்டோம். மருத்துவ நெருக்கடியும் நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்க்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
ஈகையும் இறக்கமும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைக் கொடுக்கும் வகையில் நிதி வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவை கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ஆக்ஸிஜன் பயன்படுத்தக்கூடிய படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போன்ற கொரோனா தடுப்புக்கு தேவையான பயன்பாட்டுக்களை உருவாக்க மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அளிக்கும் தொகையில் வருமான வரியில் விலக்கும் அளிக்கப்படும். உங்கள் நிதி கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க உதவிகரமாக இருக்கும். மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்.” என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, நடிகர் சிவக்குமார், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழக அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்தனர். நிதியை பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் சிவக்குமார் குடும்பத்தினருக்கு நன்றி கூறினார்.
அதே போல, திமுக சார்பில், தமிழக அரசுக்கு கொரோன தடுப்பு பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.