தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின்போது, தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம். காலநிலை மாற்றத்தால் வடகிழக்கு பருவமழை சில நாட்களிலேயே மொத்தமாக பெய்துவிடுகிறது. வானிலை தரவுகளை உடனுக்குடன் வழங்க தரம் உயர்த்தப்பட்ட செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “தமிழ்நாடு முழுவதும் 1,400 தானியங்கி மழைமானி, 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஓரிரு நாளில் அதிக மழை பெய்வதால் அதனை எதிர்கொள்ள சிரமமாக உள்ளது. துல்லியமான வானிலை ஆய்வு மைய செய்தியால் பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கடந்த காலங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் 3 மாவட்டங்களில் விரைவாக இயல்புநிலை திரும்பியது.” என்று கூறினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்புகூட ஏற்படாத வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? அதை விரைந்து முடிக்க வேண்டும். வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழையால் ஏற்படும் சேதங்களை கையாள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மரம் விழுந்தால் அதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான எந்திரங்கள், மீட்பு பணிகளுக்கான படகுகள், ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். சென்னையில் மழை வெள்ளத்தை தடுக்க அடையாறு, கூவம் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“