Advertisment

பட்ஜெட் ஏமாற்றம்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin union budget

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM MK Stalin on Union Budget 2024: மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்தார்.

Advertisment

மத்திய அரசின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, புதிய நடுத்தர வர்க்க மக்களுக்கு அதிகாரம் அளிக்கும், தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்தும் என்று கூறி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள், எதுவும் இல்லை என்றும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.

அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது.

நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது.

சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியதுதான்.

ஆனால், இன்று உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மூன்றாண்டுகளுக்கும் முன்பாக ஒன்றிய அரசு அறிவித்த நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக எந்தவொரு நிதியும் இதுவரை வழங்கவில்லை. இது, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் செயல்பாட்டினைப் பெரிதும் பாதித்து, சென்னை மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென எந்தவொரு புதிய ரெயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு வீட்டிற்கான மதிப்பீட்டினை உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது, நகர்ப்புரப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளில், ஒன்றிய அரசின் பங்கு 1.5 இலட்சம் ரூபாயாகவும், இதில் மாநில அரசால் சுமார் 12-14 இலட்சம் ரூபாய் ஒரு வீட்டிற்கு செலவிடப்படுகிறது.

எனவே, ஒன்றிய அரசின் பங்கினை உயர்த்தாமல், வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவே அமையும். திட்டத்திற்கு பிரதமரின் பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதுமானதல்ல. அதற்கேற்றால்போல நிதியும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.

ஒன்றிய அரசு அறிவித்த முக்கியத் திட்டங்களைப் பார்க்கையில், நமது மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் நகல்போலத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஆயிரம் தொழிற்பயிற்சி மையங்கள் மேம்பாட்டுத் திட்டம், பணிபுரியும் மகளிருக்கான (தோழி) விடுதிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், நீரேற்று புனல் மின் உற்பத்திக் கொள்கைகள் போன்றவை தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் ஏற்கெனவே இடம்பெற்றவை.

குறிப்பாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு, நாடு முழுவதும் 20 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு ஆண்டிற்கு 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய நிதியமைச்சர் தன்னுடைய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களை நகல் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், இரவல் வாங்கிப் பயன்படுத்தியவர், நன்றிக்கடனாக தமிழ்நாட்டிற்குப் பெரும் திட்டம் ஒன்றுகூட அறிவிக்காமல் விட்டது ஏன்?

ஒன்றிய அரசு, மாநிலப் பட்டியலில் உள்ள முத்திரைத்தாளின் கட்டணத்தைக் குறைக்குமாறு அறிவித்துள்ளது. எனினும் இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு எந்தவொரு அறிவிப்பும் இல்லை. எனவே, ஒன்றிய அரசானது, முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பினை ஈடுசெய்வதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்கு ஏற்பட்டுள்ள 20,000 கோடி ரூபாய் இழப்பிற்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது, நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், வெறும் பெயரளவிற்கு வருமானவரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாக வரிக்குறைப்பின்றி இருந்துவந்த நிலையில் வெறும் 17,500 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதும், இக்குறைப்புகூட புதிய வரிமுறையில் மட்டுமே செய்யப்பட்டு, பழைய முறையில் எவ்வித குறைப்பும் அளிக்கப்படாததும் மத்தியதரக் குடும்பங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்திற்கு வழங்கிட வேண்டுமென்று மீண்டும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இடைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசின் 2024-ம் ஆண்டு பட்ஜெட் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லை. அநீதி தான் அதிகம் உள்ளது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் திட்டங்களை கொண்டு வருவதே ஒரு சிறந்த அரசு ஆகும். அப்படிதான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் உள்ளது. தமிழ்நாட்டை பார்த்தாவது ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். 

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை. தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டின் தேவைகளை, உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் புதிய திட்டங்களை அறிவிக்காததால் நாளை தி.மு.க கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவார்கள் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Union Budget Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment