தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில், குடியரசு தினத்திற்காக உருவாக்கப்பட்ட மூன்று அலங்கார ஊர்திகள், மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஊர்திகள், மாநிலம் முழுதும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் முதல் ஊர்தி கலங்கரை விளக்கம் அருகிலும், இரண்டாவது ஊர்தி கண்ணகி சிலை பின்புறமும், மூன்றாவது ஊர்தி விவேகானந்தர் இல்லம் எதிரிலும் வரும் 23ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் அலங்கார ஊர்தியை பார்வையிட்டும், ஆர்வமாக புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, தலைமை செயலகத்தில் அலுவல் பணியை முடித்துவிட்டு இல்லத்துக்கு சென்று கொண்டிருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், அலங்கார ஊர்தியை பார்வையிடும் மாணவர்கள் கூட்டத்தை பார்த்ததும் வாகனதத்தை உடனடியாக நிறுத்த சொன்னார்.
காரில் இருந்து இறங்கிய முதல்வர், பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியனார். இதையடுத்து, பள்ளி மாணவர்கள் ஆசைக்கு இணங்க, அலங்கார ஊர்தி முன்னிலையில் மாணவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார்.
மேலும், மாணவர்களுடன் எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், " குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன்.தமிழ்நாடு வெல்லும்! என ட்வீட் செய்திருந்தார்.
பள்ளி மாணவர்கள் அலங்கார ஊர்தியை பார்த்துக்கொண்டிருந்த போது, முதல்வர் திடீரென வந்து பேசியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil