/indian-express-tamil/media/media_files/2025/02/03/79ASN7Cwg2GelhefC4v1.jpg)
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், துரை வைகோ எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி, அப்துல் சமது மற்றும் சாரண சாரணியர் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மணப்பாறையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று நண்பகல் திருச்சி வந்த முதல்வர் மாலை 5 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றி பேசியதாவது:
'கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவேளையே நீக்க 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' கொண்டு வரப்பட்டது. அதனை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக நடத்தி காட்டினார். இந்த முன்னெடுப்பால் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கற்றல், பயிற்றுவித்தலை எளிமையாக்க, நவீனமாக்க 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகளை வழங்கியுள்ளார். 22,931 ஸ்மார்ட் வகுப்புகளை அமைத்துள்ளார் அன்பில் மகேஸ். 8209 உயர்தர ஆய்வகங்களை அமைத்துள்ளார். மாணவர்களின் திறன்களை அடையாளம் காட்ட கலைத்திருவிழா, மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா, பன்னாட்டு புத்தகத் திருவிழா, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வெளியுலக அனுபவம் கிடைக்க வெளிநாட்டு பயணங்கள் என பல திட்டங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம்.
பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டிற்கு பெரும் புகழை ஈட்டி தருகிறது. இது இந்தியாவின் புகழ். உலகப்புகழ். சாரண, சாரணியர் இயக்கம் உலகளவிலான இளைஞர்களின் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தியா முழுவதும் 80 லட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் உள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 12 லட்சம் மாணவர்கள் உள்ளனர். 8-ல் ஒருபங்கு நாம் உள்ளோம். எதுவாயினும் தமிழ்நாட்டின் பங்கு என்பது எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும் என்பதை சாரண, சாரணியர் இயக்கத்திலும் உண்மையாக்கியுள்ளோம்.
மாணவர்கள் பங்குபெற்றுள்ள சாரண, சாரணியர் இயக்கம் உடல், உள்ளத்தை உறுதி செய்யும் இயக்கமாகவும், ஒழுக்கத்தை உருவாக்கக்கூடிய இயக்கமாக உள்ளது. நாளைய குடிமக்களான இளைய தலைமுறையிடம் சமூக சேவை செய்தல், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பில் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து, மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும்.
மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று. இளைய தலைமுறையினரை, இனிய தலைமுறையாக இந்த இயக்கம் மாற்றுகிறது. ராணுவ கட்டுக்கோப்பு இளைஞர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காகதான் பேடன் பவல் இந்த இயக்கத்தை உருவாக்கினார். இயக்கத்தின் பெருந்திரளணி ஒவ்வொரு நாட்டிலும் நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடைபெற்றுள்ளன.
2000ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்நாட்டில் சாரண, சாரணியர் இயக்கத்தின் பொன்விழா பெருந்திரளணியை நடத்திக் காட்டினார். வைரவிழா நடைபெறும் போது நான் முதலமைச்சராக இருக்கிறேன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதிதான். தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர் கருணாநிதிதான்.
எனவே, அவருடைய நூற்றாண்டு விழாவை நீங்கள் கொண்டாடுவது பொருத்தமானதுதான். சமத்துவம், சகோரத்துவத்துடன் நாம் இந்தியர் என்ற பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள குழந்தைகள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி, தங்களது பண்பாட்டை வளர்த்துக்கொள்ள இந்த பெருந்திரளணி நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் கனியன் பூங்குன்றனாரின் முதுமொழிக்கேற்ப சவுதி அரேபியா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து கடந்த 6 நாட்களாக ஒரே குடும்பமாக இருப்பதுதான் நம் அன்பின் வலிமை.
தி.மு.க அரசால் 33 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த பெருந்திரளணி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரண, சாரணியர் கலந்துகொண்டு, தங்களது பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்ந்நி காட்டியிருக்கிறார்கள்.
2422-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் இதில் கலந்துகொண்டவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, கழிப்பிடம் என அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழ்நாட்டு அரசால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மருத்துவ சேவைகள், தீயணைப்பு, மீட்பு பணி என முன்னெச்சரிக்கை சேவைகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜன.28ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதியால் பெருந்திரளணி திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இங்கு நடைபெற்ற குளோபல் வில்லேஜ் அரங்கம் அனைவரையும் ஈர்த்துள்ளது. அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கையின்படி, 17 இலக்குகளையும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது.
இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை. தமிழ்நாட்டில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்துக்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும். இந்திய நாடு ஒற்றுமையால் விடுதலை பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாம் அனைவரும் சமம் என்ற உணர்வோடு, ஒற்றுமையாக போராடியதால்தான் இந்த விடுதலை கிடைத்தது. அந்த ஒற்றுமை உணர்வை நாம் எப்பொழுதும் விட்டுவிடக்கூடாது.
கூடாரங்கள் தனித்தனியாக இருக்கட்டும். ஆனால் உள்ளம் ஒன்றாக இருக்கட்டும் என சொல்வார்கள். அந்த வகையில் இங்கு வந்தவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு பிரிந்து சென்றாலும், உள்ளத்தால் ஒருவர் என்ற உணர்வோடு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், துரை வைகோ எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி, அப்துல் சமது மற்றும் சாரண சாரணியர் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.