தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்ட முன்வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) தாக்கல் செய்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, "எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. எந்த திட்டமாக இருந்தாலும், அது அனைவரின் முகத்திலும் புன்னகையை வர வைக்க வேண்டும்.
ஆதிதிராவிட, பழங்குடியினர், பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என குரலற்றவர்களின் குரலாக இருக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது.
என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும், அவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்று நினைக்கிறேன். அந்த வகையில், இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகன் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் கருணாநிதி. தி.மு.க ஆட்சிக்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 667 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் இதன் நிதி ரூ. 1432 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கருணை அடிப்படை மட்டுமல்லாமல், உரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படியாக மாதாந்திர உதவித்தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், நடப்பு கூட்டத்தொடரில் சட்டமுன்முடிவு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில், மாற்றுத்திறனாளிகள் நேரடியாக போட்டியிடாமல், நியமன முறையில் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள். இதன் மூலம் உள்ளாட்சி துறைகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநித்துவம் உறுதி செய்யப்படும்" என்று அறிவித்தார்.
அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் தலா ஒரு மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக முடியும். நியமன உறுப்பினர்களான மாற்றுத்திறனாளிகளின் பதவிக் காலம், மற்ற உறுப்பினர்களின் பதவி காலத்திற்கு இணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய சட்டம் மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 650 ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.