/indian-express-tamil/media/media_files/0dlIlBMRpS42TtZVY38Q.jpg)
முதலீட்டை ஈர்க்க ஜெர்மனி, லண்டன் செல்கிறார் ஸ்டாலின்: பயண விவரங்கள் வெளியீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார். இதுவரை அவர் 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
2021-ம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றப் பிறகு முதல் முறையாக ஸ்டாலின் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்து வந்தார். பிறகு 2023-ம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்குச் சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5-வது முறையாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த முறை லண்டன், ஜெர்மனி நாடுகளுக்கு 30-ம் தேதி செல்ல உள்ளார். அவரது பயண விவரம் வெளியாகியுள்ளது.
பயண விவரங்கள்:
ஆகஸ்ட் 30: சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு பயணத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்
ஆகஸ்ட் 31: ஜெர்மனியில் உள்ள அயலக அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார்.
செப்டம்பர் 1: ஜெர்மனியில் இருந்து லண்டனுக்குப் பயணமாகிறார்.
செப்டம்பர் 2 அல்லது 3: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோரைச் சந்தித்து உரையாடுகிறார்.
செப்டம்பர் 4: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
செப்டம்பர் 6: லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
செப்டம்பர் 7: லண்டனில் இருந்து சென்னைக்குத் திரும்பப் புறப்படுகிறார்.
செப்டம்பர் 8: அதிகாலையில் சென்னை வந்தடைகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.