/indian-express-tamil/media/media_files/2025/09/29/cm-2025-09-29-14-58-42.jpg)
கரூர் பெருந்துயரம்: 'கனத்த மனநிலை, துயரத்தில் இன்னும் இருக்கிறேன்' - வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
கரூரில் த.வெ.க பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் துயரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம். இனி நடக்கக் கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள் என் கண்ணை விட்டு அகலவில்லை.
இன்னும் கனத்த மனநிலையுடனும் துயரத்திலும் தான் இருக்கிறேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடக்கிவிட்டு எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னரும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனே அன்றிரவே கரூர் சென்றேன்.
குழந்தைகள் பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கி வருகிறோம். மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம்.
நடந்த சம்பவம் தொடர்பான முழுமையான, உண்மையான காரணத்தை அறிய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணையின் அடிப்படையில் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இதற்கிடையே சமூக வலைதளத்தில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும், தன் தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்போதும் விரும்பமாட்டார்கள்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் நம் தமிழ் உறவுகள். சோகமும், துயரமும் சேர்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது இனி வரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை வகுப்பது நம் எல்லோரின் கடமை.
நீதியரசர் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பின் எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி இதற்கான நெறிமுறைகள் வகுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன்.
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 29, 2025
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.#KarurTragedypic.twitter.com/Ihum9qIWNY
மனித உயிர்கள் அனைத்திற்கும் மேலானது. நாம் என்ற பற்று அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள் கொள்கை வேறுபாடுகள், தனிமனித பகைகள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு பல வகையில் முன்னோடியாக தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தவிர்க்க வேண்டியது நமது கடமை” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.