தமிழ்நாடு பட்ஜெட்டில் ‘ரூ’-வை வைத்தது ஏன்? அதை பெரியதாக்கியவர்கள் யார்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
ungalil oruvan MK Stalin

தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கை வெளியீட்டிற்கு பின்னான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி, பதில்கள் வடிவில் நிகழ்த்திய விரிவான உரையாடலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்தான ‘ரூ’-வை அச்சிட்டது தேசிய அளவில் விவாதமானது. மேலும், தமிழ்நாடு பட்ஜெட்டை எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க  கடுமையாக விமர்சித்தன.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்தான ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கை வெளியீட்டிற்கு பின்னான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி, பதில்கள் வடிவில் நிகழ்த்திய விரிவான உரையாடலை வீடியோவாக வெளியிட்டுள்ளார். 


அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேள்வி, பதில்கள் வடிவில் நிகழ்த்திய விரிவான உரையாடலை இங்கே தொகுத்து தருகிறோம்:

Advertisment
Advertisements

1.பட்ஜெட்டுக்கு முன்னாடி நீங்கள் போட்ட ட்வீட்டே நேசனல் நியூஸ் ஆகிவிட்டதே?

ஒன்றுமில்லை. பட்ஜெட் லோகோ (logo)-வை வெளியிட்டிருந்தேன். மொழிக்கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை அதில் ‘ரூ’ என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள். அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள்.

ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பேரிடர் நிதி வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்களை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்கிறார்.

அவங்களே, பல பதிவுகளில் ரூ-என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் ரூப்பீஸ் (Rupees) என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்னையாக தெரியாதவங்களுக்கு, இதுதான் பிரச்னையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்!

2.பட்ஜெட்டுக்கான முன்னேற்பாடுகள் எல்லாம் எப்படி செய்தீர்கள்?

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், ழான் திரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மறுபுறம், அடித்தட்டு மக்களிடையிலும், அவர்களுடைய தேவைகள் என்னவென்று, கேட்டு தெரிந்துகொண்டோம். அதுமட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் மக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டங்கள் என்ன என்று ஆராய்ந்து, அதை நம் மாநிலத்திற்கு ஏற்ற வகையில் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்தோம்.

இதற்காக, பல நாட்கள் தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் உட்கார்ந்து பேசி பேசித்தான் இந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்தோம்.

3.உங்களை பொறுத்தவரை பட்ஜெட் எப்படி வந்திருக்கு?

நான் என்ன சொல்கிறேன் என்பதைவிட, இந்தியா முழுக்க வெளிவருகிற நாளிதழ்கள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை பாருங்கள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில், தலைப்பிட்டு கார்ட்டூனில் ஒரு கோலத்தில், எல்லா திட்டங்களும் கொண்டு வந்து சேர்த்ததை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா- பத்திரிகையில், “எதிர்க்கட்சிகளின் அரசியல் குற்றச்சாட்டுகளை ‘செக்மேட்’ செய்திருக்கிறது இந்த பட்ஜெட்” என்று எழுதி இருக்கிறார்கள்.

தி இந்து நாளிதழில், “மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியத் துறைகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த பட்ஜெட்”-என்று எழுதியிருக்கிறார்கள்.

“கல்வி, சமூகநலத் திட்டங்களுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்” என்று டெக்கான் கிரானிக்கள் நாளிதழில் எழுதி இருக்கிறார்கள்.

“மக்கள் நலத்திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பட்ஜெட்”- என்று தி பிசினஸ் லைன் பாராட்டி இருக்கிறார்கள்.

பெண்கள் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் நலத்திட்டங்களையும் மையப்படுத்தி இருக்கிறதாக, தி எக்கனாமிக் டைம்ஸ்-ல் எழுதி இருக்கிறார்கள்.

தினமணி-ல் நாம் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையை பற்றி சிறப்பான தலையங்கத்தை எழுதியிருந்தார்கள்.

“இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது” என்று கூசாமல் கேட்கிறவர்கள், பத்திரிகையாவது படிக்க வேண்டும்.

4.இந்த பட்ஜெட்டில உங்களுக்கு நெருக்கமான அறிவிப்பு எது?

எனக்கு எல்லாமே நெருக்கமானதுதான். மக்களுக்கு எது பிடித்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சமூக வலைதளத்தில் அவர்கள் பதிவிட்ட பதிவுகளைப் பார்த்தேன்.

கருப்பை, வாய்ப்புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க, 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அரசே இலவசமாக தடுப்பூசி செலுத்தலாம் என்கிற ஆலோசனையை சமூக வலைத்தளத்தில் ஒருவர் முன்மொழிந்திருந்தார்.

அதை நிறைவேற்றுகிற அறிவிப்பை நாம் வெளியிட்டதும், அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்த ட்வீட் இது! அதுமட்டுமில்ல, டாக்டர் நிகிதா மேஹ்ரா என்பவரும் “Fantastic News”-என்று பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தார்கள்.

அதேபோல, தெலங்கானாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்ற பணிகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்க போகிறதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். தமிழ்நாட்டிலும், அதனை செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

அதன்படி, ஊர்க்காவல் படையில் திருநங்கைகளையும் ஈடுபடுத்துற அறிவிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. “சில நாட்கள் முன்பு, விருதுநகர் சென்றபோது, அரசு காப்பகத்தில் இருக்கிற பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக்கொண்டு சென்றேன். காப்பகங்களில் இருக்கிறவர்களை நாம் பார்த்துக்கொள்கிறோம். மற்ற குழந்தைங்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் தாயுமானவர் திட்டம்!”

ஆதரவற்ற முதியோருக்காக ‘அன்புச்சோலை திட்ட’த்தை அறிவித்தோம். இதற்கு மக்கள் பெருமளவில் வரவேற்பளித்துள்ளனர்.

மேலும் 45 மொழிகளில், திருக்குறள் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமல்ல, ஆனந்த் சீனிவாசன், பிரபாகர், சோம. வள்ளியப்பன் போன்ற பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்திருப்பது, இது ‘எல்லாருக்கும் எல்லாம்’ பட்ஜெட்!

5.எதிர்க்கட்சிகளுடைய விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால், அதை நாம் பரிசீலிக்கலாம். ஆனால், ஏதாவது குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே, சிலர் சொல்வது அரசு மேல் இருக்கிற வன்மம் மட்டும்தான் என்பது தெரிகிறது. உருப்படியான எதுவும் அதில் இல்லை.

நாம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை ஆதாரப்பூர்வமாக சொல்ல விரும்புறேன்.

2011-ல் இருந்து 2016 வரை, நம்முடைய கடன் வளர்ச்சி என்பது 108 விழுக்காடு. இதுவே, 2016-ல் இருந்து 2021-ல் 128 விழுக்காடாக அதிகரித்தது. ஆனால், நம் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து இப்போதுவரை 93 விழுக்காடாக இதை குறைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டுடைய கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. கடன் வாங்காத அரசு என்று எதுவும் இல்லை. அப்படி வாங்குகின்ற கடனை முறையாக செலவு செய்கிறோமா என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில், எதிர்கால தலைமுறைக்கான முதலீடாகதான் திராவிட மாடல் அரசு கடன் தொகையை செலவு செய்திருக்கிறது. அதனால்தான், எதிர்க்கட்சிகளுடைய பொருளற்ற விமர்சனத்தை வல்லுநர்களும், நாளேடுகளின் தலையங்கங்களுமே “தவறு”-என்று ஆணித்தரமா சொல்லிவிட்டார்கள்.

6.அடுத்து என்ன சார்?

இப்போது அறிவித்ததை எல்லாம் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சர்களை, அதிகாரிகளை முடுக்கி விடுவதுதான் உடனடியான, என்னுடைய அடுத்த வேலை.

அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசுடைய நிதி ஒதுக்கீட்டில், ஓரவஞ்சனை, அதைப் பற்றி நாம் குரலெழுப்புவதால், நாடாளுமன்ற தொகுதி குறைப்பு என்ற ஆபத்து என நம் மாநிலத்துக்கான நிதிக்கும் நீதிக்கும் போராட வேண்டியிருக்கிறது. அதையும் பார்க்க வேண்டும்.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாடு அனைத்திலும் நம்பர் 1-ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும் என்ற நிறைய பணிகள் இருக்கிறது. அதனால் ஓய்வே கிடையாது!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: