செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும், அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என பாசிமணி விற்கும் பழங்குடியின பெண் அஸ்வினி, அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்பிரச்சனை குறித்து அறிந்ததும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்தக் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
மேலும், அன்னதானத்தில் பாரபட்சம் பார்க்கக்கூடாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் புகாரளித்த பழங்குடியின பெண் அஸ்வினி உள்ளிட்ட அச்சமூகத்தை சேர்ந்தவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். மேலும், பழங்குடியின பெண் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து செல்வதாகவும் உறுதியளித்தார்.

அதன்படி, முதல்வரின் கவனத்துக்கு பழங்குடியின மக்களின் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது. இதை ஆராய்ந்த முதல்வர், அப்பகுதி மக்களுக்குப் பட்டா கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தீபாவளி பண்டிகையான இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், அங்கு வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, பழங்குடியின பெண் அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதல்வர், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தவாறு அவர்களுடன் உரையாற்றினார். ஐயா நீங்கள் எங்கள் வீட்டுக்கா என மனம் நெகிழ்ந்து கேட்டார் அஸ்வினி. ஒன்றும் பிரச்சினை இல்லை நலமா இருக்கிறாயா என்று ஸ்டாலின் கேட்டார். சிறிது நேரத்தில், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மேலும், நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்த பெண்ணின் குறைகளைத் தீர்த்தது மட்டுமின்றி அவர்கள் வசிக்கும் வீட்டிற்கே முதல்வர் நேரடியாகச் சென்றது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஆர்வலர்கள் முதல்வரின் செயலை பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் முதல்வருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil