தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
பசும்பொன் உ முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா அக்.30ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (அக்.29) மதுரை செல்கிறார்.
அங்கு கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து பசும்பொன் நினைவிடம் செல்லும் அவர் அங்கு தேவருக்கு மரியாதை செலுத்துகிறார்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். எடப்பாடி பழனிசாமி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் வியாழக்கிழமை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பசும்பொன் தேவரின் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பசும்பொன் தேவர் திருவுருவ சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil