“தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். தென் மாநிலங்கள் உள்பட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதிமொழியை நீங்கள் தமிழ்நாட்டு மண்ணில் நின்று வழங்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இலங்கையில் இருந்து இன்று ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி , ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைத்தார். பின்னர், ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, மண்டபம் அருகே பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 3 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கட்டமைப்பே மத்திய அரசின் நோக்கம்; கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்த பிறகும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும். அழுதுவிட்டு போகட்டும்” என்று மறைமுகமாக விமர்சித்தார்.
இந்நிலையில், உதகையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய பிரதமர் மோடியை நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். தென் மாநிலங்கள் உள்பட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதிமொழியை நீங்கள் தமிழ்நாட்டு மண்ணில் நின்று வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இன்னும் சில மணி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு, ராமேஸ்வரத்திற்கு பிரதமர் வர இருக்கிறார். நீலகிரி விழாவில் கலந்துகொள்வதால் என்னால் ராமேஸ்வரம் விழாவில் பங்கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். அந்த நிகழ்ச்சியில் தங்கம் தென்னரசு, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தின் மூலமாக, இந்த நிகழ்சியின் மூலமாக, உங்கள் மூலமாக மூலமாக, தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய பிரதமர் மோடியை நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். தென் மாநிலங்கள் உள்பட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதிமொழியை நீங்கள் தமிழ்நாட்டு மண்ணில் நின்று வழங்க வேண்டும். அதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ தொகுதி எண்ணிக்கை பிரச்னை பற்றிய கவலை மட்டுமல்ல. நம்முடைய அதிகாரம், உரிமைகள் பற்றிய எதிர்காலம் பற்றிய கவலை. புதுச்சேரியைச் சேர்த்து 40 எம்.பி.க்கள் இருக்கும்போது, தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்குகிறார்கள். இந்த எண்ணிக்கையும் குறைந்தால், தமிழ்நாட்டை ஒழித்துவிடுவார்கள், தமிழ்நாட்டை நசுக்கி விடுவார்கள்.
இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீடு குறைவு, சிறப்புத் திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று நமது எம்.பி.க்கள் தமிழ்நாட்டுக்காக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பேசுகிறார்கள். அதனால்தான், நமது வலிமையைக் குறைக்க பா.ஜ.க துடியாக துடிக்கிறது.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.